சாரு நிவேதிதா- தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

 இந்த வருடம் சாரு -வோட ஒரு புத்தகம் படித்தாக வேண்டும் என்று முடிவு  எடுத்தேன். அப்படி என் தீர்மானத்திற்கு அகப்பட்டது தான் "சாரு  நிவேதிதா- தேர்ந்தெடுத்த சிறுகதைகள்" தொகுப்பு. சுய விருப்பத்திற்கேற்ப ரசனைக்கேற்ப 13 சிறுகதைகளைத் தொகுத்துள்ளார்- நா.முருகேசபாண்டியன். டிஸ்கோவரி புக் பேலஸ் இதை பதிப்பித்துள்ளது.




BYNGE-யில்  வெளிவந்த "அ-காலம்" படித்துள்ளேன் மிகவும்  நுட்பமான தகவல் இருந்தது. அதே போல இரண்டு  கதைகள் உள்ளன அது கதைக்குச்  சேரா புத்தக விமர்சனம். "முள்" கதையை தவிர்த்து அனைத்து கதைகளிலும் கதைசொல்லியும் , கதாபாத்திரமும் (வெவ்வேறு  பெயர் என்றாலும்) - அது சாரு-வாக  உள்ளார். "கண்ணிநுண் சிறுத் தாம்பு" மற்றும் "என் முதல் ஆங்கிலக்  கடிதம்" கதை என் மனதிற்கு நெருக்கமானவை. தனிமையைக்  குறித்தும் மற்றும் நட்பு காதலாக மாறும் படலம் குறித்தும் அழகாக விவரித்துள்ளார்.

"என் முதல் ஆங்கிலக்கடிதம்" கதையில் வரும் சம்பாஷணை  ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" வரும் பிரபு - கங்கா-வை ஞாபகப்படுத்தின. கலவரம் பற்றியான "பிளாக் நம்பர் : 27 திர்லோக்புரி" படித்து மனம் பதறியது. முன்பு மண்டோ-யின் சிறுகதையில் ஏற்பட்ட அதே உணர்வு. சோதனை முயற்சிகளைச் சிறுகதையில்  கையாண்டுள்ளார் அதற்கு சிறந்த உதாரணம் "பிணவறைக் காப்பாளன்". Linear, Non-linear  என்று சொல்லமுடியாத புதிய யுக்தி இதில் உள்ளது."மதுமிதா சொன்ன பாம்பு கதை" மட்டும் புரியவில்லை.

அனைத்து  கதைகளையும் தன்னைச் சார்ந்த அனைவரும்  பற்றியும் நிகழ்ந்த சம்பவங்களைப்  பற்றியும் புனைவாக விவரித்துள்ளார். இதை அவர் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் - AUTO -FRICTION.

மொத்ததில் அலங்காரம், பழைய நடை  ,பாணி  இவை எதுவும் இல்லாமல் ஒரு சிறுகதை ரசிக்க வைக்கவும் அதில் ஒரு கிளாசிக் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சாரு-வின் எழுத்து ஒரு சான்று.  



Popular Posts